Thursday, 14 July 2011

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குறித்து உளவுத்துறை எச்சரிக்கை செய்யவில்லை- ப.சிதம்பரம்

மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மும்பைக்கு நேற்று நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார்.

இன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், 

இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது.

கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன்.

தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு.

மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது.

குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.

சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.
P Chidambaram
மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது என்றார் ப.சிதம்பரம்.

No comments:

Post a Comment

Hot Toppics