இலங்கைப் போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான காட்சிகள் தொடர்பாகவும், அந்தப் போர் தொடர்பாக ஐ.நா. தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பி.பி.சி.யில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி விவகாரங்கள் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
சனல் 4 வெளியிட்ட இறுதிப்போர் தொடர்பான காட்சிகள் , இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் தெளிவில்லாத நிலைமையே காணப்படுகின்றது. இவைத்தொடர்பில் இலங்கை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதுடன் அவைத்தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள கவலைகள் குறித்து ஆராயப்பட வேண்டும் .
இந்தியாவைப் பொறுத்தவரை,வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக செயல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் .இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிவடைந்த நல்ல சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்துகிறது .
போரின் இறுதிக்கட்டத்தில் நடந்தாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சு அந்த அறிக்கை தொடர்பாக இன்னும் பல கேள்விகள் இருகின்றன என்றும் தெரிவித்திருந்தது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையைப் பொறுத்தவரை, இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருந்த நேரத்திலும், கடந்த மாதம் கொழும்பில் நடந்த ஒரு மாநாட்டின் போதும் இலங்கை அரசின் கருத்துக்களை இந்தியா கேட்டறிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment