Monday, 18 July 2011

விஜயால் பொலிஸிடம் அடிவாங்கும் ரசிகர்கள்

Vijay - SACவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் நடிகர் விஜய். ஒவ்வொரு முறையும் இப்படி கூடும் ரசிகர்கள் அவரைதொட்டுப்பார்க்கும் ஆசையில் நெருக்கியடிப்பதால் விழாவே களேபரமாகி விடுகிறது. இதுபோன்ற கூட்டங்கள் அத்தனையிலும் ரசிகர்கள் தடியடி பிரசாதம் வாங்கிக் கொண்டுதான் வீடு திரும்புகிற சோகமும் நடந்தேறுகிறது.
ரசிகர்களே தங்களுக்குள் ஒழுங்கை கடைபிடிக்காத வரை இது போன்ற தடியடிக்கு முடிவே இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்த விழாவில் ஏதாவது கலவரம் நடக்காதா என்று காத்திருந்த ஒரு சில மீடியாக்களுக்கு இந்த செய்தி பிளாஷ் நியூஸ் ஆனதுதான் கொடுமை.
அதுபோகட்டும்... விஜய் என்ன பேசினார் அங்கே?
"தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன். அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்"
இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யும் கலந்து கொண்டார். சுமார் 8 லட்ச ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Hot Toppics