Friday, 15 July 2011

டோனி தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்: ஹார்பர்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களுக்கு பாதகமாக நடுவர் டேரில் ஹார்பர் சில முடிவுகளை வழங்கினார். இதற்கு இந்திய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய அணித் தலைவர் டோனி, நடுவர் சரியான முடிவை அளித்து இருந்தால் ஆட்டம் முன் கூட்டியே முடிந்து இருக்கும் என்று விமர்சித்து இருந்தார்.

இந்திய வீரர்களின் விமர்சனத்தால் நடுவர் ஹார்பர் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் நடுவர் ஹார்பர் அளித்த ஒரு பேட்டியில், ஆடுகளத்தில் பலமுறை ஓடியதால் பிரவீன்குமார் மீது நடவடிக்கை எடுத்ததும், என்னை நோக்கி வந்த டோணி, ஏற்கனவே உங்களால் எங்களுக்கு நிறையப் பிரச்சினைகள் வந்துள்ளது என்று கோபத்துடன் கூறினார். முதல் டெஸ்ட் போட்டியின் போது டோணி என்னைப் பார்த்து பொருத்தமில்லாத வார்த்தைகளைப் பயன்புத்தினார். மேலும் தனது விருப்பப்படி நடக்க செய்ய முயற்சி செய்தார்.

ஆனால் அதனை நான் ஏற்கவில்லை. நான் ஒருபோதும் எந்தவொரு அணிக்கோ, அணித் தலைவருகாகவோ, கிரிக்கெட் வாரியத்துக்கோ பணிந்து நடந்தது கிடையாது.

விளையாட்டை அவர்கள் முதலில் மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. டெஸ்ட் போட்டி என்பது பயிற்சி ஆட்டம் அல்ல. அது மிகவும் உண்மையாக விளையாடப்பட வேண்டியது. பிரவின் முதல் போட்டியில் விளையாடுகிறார் என்பதற்காக சலுகையெல்லாம் காட்டிக் கொண்டிருக்க முடியாது என்றார் ஹார்ப்பர்.

நான் அந்தப் போட்டியில் 9 தவறுகளை செய்ததாக ஒரு பத்திரிக்கையில் எழுதியுள்ளனர். ஆனால் அதுகுறித்துப் பேச வேண்டியது ஐசிசிதான். ஆனால் அது அமைதியாக உள்ளது. மற்றவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

எனது முடிவு குறித்து வெளிப்படையாக விமர்சித்த டோனி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். அவரது விமர்சனம் முறையற்ற நடவடிக்கையாகும்' என்று தெரிவித்துள்ளார்.
-

No comments:

Post a Comment

Hot Toppics