Monday, 18 July 2011

யானைகளுக்கு ஆப்பு வைக்கும் தேனீக்கள்: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு _

காட்டுயானைகளின் அட்டகாசத்திற்கு பல கிராமங்கள் இன்னும் முகங்கொடுத்து வருகின்றன.

கூட்டமாக கிராமங்களுக்குள் நுழையும் யானைகள் பயிர் நிலங்களை சேதப்படுத்துவது மட்டுமன்றி உயிழப்புக்களையும் ஏற்படுத்துவதுண்டு.

காட்டு யானைகளுக்கு முகங்கொடுப்பது இலங்கை மட்டுமல்ல பல்வேறு நாடுகளும் இப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றன.

இவற்றைக் கட்டுபடுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

மின்வேலி அமைத்தல் இவற்றில் ஒன்றாகும். எனினும் காட்டு யானைகள் மின்வேலிகளையும் உடைத்து எரிந்து கிராமங்களுக்குள் புகுந்து அழிவுகளை ஏற்படுத்துகின்றன.

சிலவேளைகளில் யானைகள் மின் தாக்குதலில் உயிரிழப்பதுமுண்டு.

காட்டு யானைகள் இவ்வாறு கிராமகளுக்குள்ளும் பயிர் நிலங்களுக்குள்ளும் புகுந்து அழிவுகள் ஏற்படுத்துவதை தவிர்க்க வித்தியாசமான உபாயமொன்றைக் ஆய்வாளர்கள் கென்யாவில் கையாண்டுள்ளதுடன் அதில் வெற்றியும் பெற்றுள்ளுனர்.

இதன்படி பயிர்நிலங்களை சுற்றி அமைக்கப்படும் வேலிகளில் அவர்கள் செயற்கை தேன்கூட்டை கட்டி விடுகின்றனர். இவற்றில் தேனீக்களை பராமரிக்கின்றனர்.

மேற்காட்டப்பட்டுள்ள கட்டமைப்பிலேயே தேனீக்கள் பராமரிக்கப்படுகின்றன. இக்கட்டமைப்புக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. காட்டு யானைகள் இதனைத்தாண்டி உள் நுழைய முற்படும் போது இதில் இருந்து தேனிக்கள் வெளியாகின்றன. எனவே அவை உடனேயே இவ்விடத்தை விட்டுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பொதுவாக யானைகள் தேனீக்கள் மீது பயம் கொண்டவை. எனவே இந்த உத்தியானது ஆய்வுகளின்படி மிகவும் வெற்றியளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் யானைகள் மேற்தோல் மிகவும் கனமானது என்பதனால் தேனீக்களால் அவற்றை ஒன்றும் செய்ய முடியாது. ஆனாலும் தேனீக்களால் யானைகளின் கண்களையும், தும்பிக்கையின் உள்ளேயும் தாக்க முடியும். 

இவை காட்டு யானைகளின் அட்டகாசத்தை வெகுவாக குறைத்திருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

இதனால் பாதுகாப்பு காரணம் கருதி யானைகள் சுட்டுக் கொல்லப்படுவதினையும் குறைத்துள்ளதாக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. 

மேலும் இத்தேனீக்கள் மூலம் பெறப்படும் தேனின் மூலம் விவசாயிகளின் வருமானம் ஈட்டக்கூடியதாகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே எதிர்க்காலத்தில் இத்தகையதோர் உபாயமார்க்கமானது இலங்கையில் கையாளப்படுமானால் அது இலங்கையின் பின்தங்கிய கிராமங்களில் காட்டு யானைகளால் ஏற்படுத்தப்படும் சேதங்களுக்கும், பொருளாதார மற்றும் உயிர் இழப்புக்களுக்கும் ஓரு தீர்வாக அமையும். 


No comments:

Post a Comment

Hot Toppics